கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் கற்றல் உபகரணங்கள் வழங்கல்
நுவரெலியா கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யா ஸ்மார்ட் பலகைகள், மேசைகள் மற்றும் கதிரைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களைக் கையளித்துள்ளார்.
நுவரெலியா, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தினால் கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பாடசாலையின் அதிபர் எஸ். ஜெகதீஸ்வரன் தலைமையில் புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. சரண்யா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேசைகள், கதிரைகள் மற்றும் ஸ்மார்ட் பலகைகள் உள்ளிட்ட கற்றல் வளங்களைக் கையளித்தார்.
நுவரெலியா கல்விப் பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் கணேஷ்ராஜ் விசேட அதிதியாகப் பங்கேற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பானா தங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வழங்கப்பட்டுள்ள இந்த நவீன கற்றல் உபகரணங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் எனக் குறிப்பிட்ட பாடசாலைச் சமூகம், தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்திற்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.



