தவெக கூட்டத்தில் விதிமுறை மீறல்? வேலூர் மாவட்ட காவல்துறை அதிரடி விளக்கம் - "ஒன்றரை மாத போராட்டம் என்பது பொய்"

காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. பிப்ரவரி 6-ஆம் தேதிதான் முதல் மனு அளிக்கப்பட்டதாகவும், பின்னர் பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தப்பட்ட மனு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கூட்டத்தில் விதிமுறை மீறல்? வேலூர் மாவட்ட காவல்துறை அதிரடி விளக்கம் - "ஒன்றரை மாத போராட்டம் என்பது பொய்"

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு தொடர்பாக அந்த மாவட்ட காவல்துறை விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் அனுமதி பெறுவது குறித்து வெளியிட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், கூட்டத்தில் நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறை தரப்பு விளக்கத்தின்படி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் கூறியது தவறானது. பிப்ரவரி 6-ஆம் தேதிதான் முதல் மனு அளிக்கப்பட்டதாகவும், பின்னர் பிப்ரவரி 18-ஆம் தேதி திருத்தப்பட்ட மனு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை கேட்ட அடிப்படை விவரங்களை பிப்ரவரி 20-ஆம் தேதி நிர்வாகிகள் சமர்ப்பித்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களிலேயே, அதாவது பிப்ரவரி 22-ஆம் தேதியே அனுமதி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. எனவே, அனுமதி வழங்குவதில் எவ்வித காலதாமதமும் செய்யப்படவில்லை என காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மேலும், 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என உறுதி அளித்து அனுமதி பெற்ற நிலையில், பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசின் அரசாணை எண் 05-ல் உள்ள விதிமுறைகளை மீறிய செயலாகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை சிறப்பாகச் செய்து முடித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர