அஸ்வெசும பயனாளிகள் 16,800 பேர் இன்னும் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை; மார்ச் வரை அவகாசம்
இலங்கை அரசாங்கத்தின் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்குத் தகுதி பெற்ற 16,800 பயனாளிகள் இதுவரையில் தமக்கான வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு வங்கி கணக்குகளை ஆரம்பிக்காதவர்களில் பெரும்பாலானோர், தாம் இந்த உதவித் திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளோம் என்பதையே அறியாத நிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவான பயனாளிகள் (சுமார் 2,700 பேர்) இன்னும் கணக்குகளைத் திறக்கவில்லை.
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் சுமார் 1,000 பேர் வங்கி கணக்குகள் இன்றி உள்ளனர். வங்கி கணக்குகள் இல்லாத பயனாளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இரத்தினபுரி இரண்டாவது இடத்தில் உள்ளது.
வறிய மற்றும் மிக வறிய பிரிவைச் சேர்ந்த இந்தப் பயனாளிகளில், வறிய பிரிவில் மட்டும் 8,900 பேர் இதுவரை வங்கி கணக்குகளை ஆரம்பிக்கவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பயனாளிகள் அனைவரும் ஏதாவதொரு அரச வங்கியில் 'அஸ்வெசும' என்ற பெயரில் பிரத்யேக வங்கி கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
2025 ஜூலை முதல் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையிலான எட்டு மாதங்களுக்குரிய கொடுப்பனவுகள் ஏற்கனவே அந்தந்த வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன. தகுதியிருந்தும் இதுவரை கணக்குகளைத் திறக்காதவர்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் கணக்குகளை ஆரம்பித்து அது குறித்துத் தெரியப்படுத்தினால், முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகைகளையும் சேர்த்துப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பலருக்குத் தேசிய அடையாள அட்டை இல்லாததே வங்கி கணக்குகளை ஆரம்பிப்பதில் உள்ள முக்கிய தடையாகக் கண்டறியப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களுக்கு ஏற்கனவே குறுஞ்செய்திகள் மற்றும் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டும் இந்தத் தாமதம் நிலவி வருகிறது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நலன்புரி நன்மைகள் சபை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

