மலையகத்தின் பல பகுதிகளில் அடர்ந்த மூடுபனி.. சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, தலவாக்கலை மற்றும் ஹட்டன் பகுதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. வாகன ஓட்டிகள் அவதானமாக பயணிக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவி வருகிறது.
குறிப்பாக தலவாக்கலை (Talawakelle) – நுவரெலியா (Nuwara Eliya) பிரதான வீதியில் கடும் மூடுபனி காணப்படுவதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹட்டன் (Hatton) – நுவரெலியா (Nuwara Eliya) பிரதான வீதியிலும், அதனை ஒட்டியுள்ள கிளை வீதிகளிலும் அடர்ந்த மூடுபனி நிலை தொடர்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு ஹட்டன் (Hatton) பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக முகப்பு விளக்குகளை (Head Lights) ஒளிரச் செய்தவாறு மெதுவாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் பார்வைத்திறன் குறைவடைவதால், தேவையற்ற வேகப் பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.