சாமரவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 17-க்கு ஒத்திவைப்பு
பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பள்ளிப் பைகளை வழங்க அரச வங்கி வழங்கிய 10 இலட்சம் ரூபாய் நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நவம்பர் 17-ம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாலர் பாடசாலை மாணவர்களுக்குப் பள்ளிப் பைகளை வழங்குவதற்காக, ஓர் அரச வங்கியால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, பதுளை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கை விசாரித்த பதுளை நீதவான், வழக்கினை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, ஊவா மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில், பாலர் பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகங்களுக்கான பைகளை வழங்குவதற்காக அரச வங்கியொன்று வழங்கிய 10 இலட்சம் ரூபாய் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த பாராளுமன்ற உறுப்பினரை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.