ஹட்டன் டிக்கோயா வயோதிப தம்பதி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல் – நகைகள், ஆயுதங்கள் மீட்பு
ஹட்டன் – டிக்கோயா நகரில் கணவன் மற்றும் மனைவியைக் கொலை செய்து, பெண் அணிந்திருந்த 18 பவுண்ட் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கின் சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணைகளின் பின்னர், அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
47 வயதுடைய சந்தேகநபர், ஹாலிஎல, தெமோதரைப் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான `செல்லையா மனோஜ்' என்பவராவார். இவர் கடந்த 21-ஆம் திகதி இந்தக் கொடூரக் கொலையைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி, பொகவந்தலாவை – பெட்ரோசோ தோட்டத்தில் தலைமறைவாக இருந்துள்ளார்.
பின்னர், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடந்த 23-ஆம் திகதி அதிகாலை அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தற்போது, சந்தேகநபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

