வட்டவளையில் பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – தாய், இரண்டு மகள்கள் காயம்
வட்டவளை கரோலினா பகுதியில் முச்சக்கர வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. தாய் மற்றும் இரண்டு மகள்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட்டவளை – ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கரோலினா பகுதியில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீர்கொழும்பு இலிருந்து ஹட்டன் நோக்கி உறவினர் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை குடும்பத்தின் மூத்த மகள் இயக்கி வந்ததாகவும், அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வளைவு பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.