கொத்மலை வேன் விபத்து: 120 அடி பள்ளத்திலிருந்து குடும்பத்தை மீட்ட 12 வயது சிறுவனின் வீரச்செயல்
நுவரெலியா - கொத்மலை வீதியில் 120 அடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், காயங்களுடன் துணிச்சலாக மேலே ஏறி வந்து தனது குடும்பத்தையே காப்பாற்றியுள்ளார் 12 வயது சிறுவன் ஹிரந்த.
கொவெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தென்ன நோக்கி நள்ளிரவு வேளையில் பயணித்த வேன் ஒன்று, ரம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து 120 அடி ஆழமான பள்ளத்திற்குள் தலைகுப்புற வீழ்ந்தது.
கும்மிருட்டான நள்ளிரவு நேரம் என்பதால் வீதியில் சென்ற மற்ற வாகனங்களுக்கு இந்த விபத்து குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. விபத்தின் கோரத்தால் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
கொத்மலை காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன், தனக்கு ஏற்பட்ட காயங்களையும் வலியையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கினான்.
அந்த ஆழமான பள்ளத்திலிருந்து மேலே வருவது சாதாரணமான காரியமல்ல. ஆனால், தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அங்கிருந்த மரங்கள், பாறைகள் மற்றும் கொடிகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, மற்றுமொருவருடன் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீதியை வந்தடைந்தான்.
வீதிக்கு வந்த சிறுவன் அங்கிருந்த லொறி ஊழியர்களின் உதவியுடன் கொத்மலை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கினான். சிறுவனின் இந்தத் துரிதச் செயல்பாட்டால் விபத்தில் சிக்கியவர்கள் விரைவாக மீட்கப்பட்டு கொத்மலை மற்றும் நுவரெலியா பொது வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உரிய நேரத்தில் சிறுவன் செயல்பட்டிருக்காவிட்டால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிறுவன் ஹிரந்தவின் இந்த அசாத்திய வீரத்தைப் பாராட்டி பொலிஸாரும் அந்தப் பகுதி மக்களும் கௌரவித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள இந்தச் சிறுவன் இப்போது அந்தப் பிரதேசத்தின் நிஜ நாயகனாகப் பார்க்கப்படுகிறான்.