'மலையக காந்தி' ஐயாவின் 63வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் சிவசாமி வீரப்பன் கலந்து கொண்டு, அன்னாரின் பண்புகள், போராட்ட மனப்பாங்கு மற்றும் சமூக நீதி மீதான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.
'மலையக காந்தி' ஐயாவின் 63வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மலையக மக்களின் இதயங்களில் அழியாத பெயராக நிலைத்து நிற்கும் “மலையக காந்தி” என்றும், கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய அமரர் கே. இராஜாலிங்கம் ஐயாவின் 63வது நினைவு தினம் இன்று புதன்கிழமை (11) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

புசல்லாவை சங்குவாரி தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சமாதி வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் மலரஞ்சலி செலுத்தி, அன்னாரை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது. 

புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் டி. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் சிவசாமி வீரப்பன் கலந்து கொண்டு, அன்னாரின் பண்புகள், போராட்ட மனப்பாங்கு மற்றும் சமூக நீதி மீதான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார்.

குடும்பத்தினரின் சார்பில் சி. ஜெயகுமார் கலந்துகொண்டு, மறைந்த தலைவருடன் தொடர்புடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்வை ஆசிரியர் கமலநாதன் (கமல்) தொகுத்து வழங்கியதுடன், ஆசிரியர் எஸ். புவனேந்திரன், சுயாதீன ஊடகவியலாளர் இராமசந்திரன் சனத் உள்ளிட்டோர் அன்னாரின் சமூக சேவைகள் மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் கே. சண்முகராஜ் உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். 

63 ஆண்டுகள் கடந்த பின்னரும் கே. இராஜாலிங்கம் ஐயாவின் சேவை, தியாகம் மற்றும் நேர்மை ஆகியவை புதிய தலைமுறைக்கு வழிகாட்டியாக தொடர்ந்து விளங்குகின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர