நுவரெலியாவில் 6 மாதங்களாக கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்: அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

நுவரெலியா ஹக்கலை பகுதியில் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் அவலநிலையில வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Published on: 15 May 2026, 07:53 pm
31

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
நுவரெலியாவில் 6 மாதங்களாக கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள்: அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

நுவரெலியா மாவட்டத்தின் ஹக்கலை பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி மற்றும் மண்சரிவால் வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தற்காலிக கூடாரங்களில் கடுமையான அவலநிலையில வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அந்த குடும்பங்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் கூற்றுப்படி, ஹக்கலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் பலத்த காற்றைத் தாங்க முடியாத நிலையில் உள்ளன. சில கூடாரங்கள் காற்றில் பறந்துசெல்லும் அபாயமும் உருவாகியுள்ளதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மண்சரிவுக்குப் பின்னர் ஆரம்பத்தில் பொது இடங்களிலும் தோட்டக் கோவில்களிலும் தங்கியிருந்த இந்தக் குடும்பங்கள், பின்னர் அரசாங்கத்தால் தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டனர். எனினும், அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததுடன், தற்போதைய மழைக்காலத்தில் விஷப் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் உயிர் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக சில அதிகாரிகள் தங்களை கடுமையாக எச்சரித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

“நாங்கள் முடிவு எடுக்கும் வரை யாரிடமும் இந்த நிலை பற்றி பேசக்கூடாது” என்று அதிகாரிகள் கூறியதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர வீடுகள் வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் உடனடியாக மீள்குடியேற்றம் செய்து தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.