டாஸ்மாக் ஊழியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை எனத் தெரிவித்த சீமான், அதுவரை டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 27,000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Published on: 11 Feb 2026, 07:52 pm
5

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
டாஸ்மாக் ஊழியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் மதுபான சில்லறை விற்பனைக்கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் வழங்கப்படாமல் தொகுப்பூதிய முறையில் குறைந்த சம்பளத்திலேயே பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களை கொத்தடிமைகள் போல நடத்துவது கொடுங்கோன்மை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை எனத் தெரிவித்த சீமான், அதுவரை டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 27,000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களை நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பிற பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின், பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்திற்கு மாற்றி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட மாற்றங்களுக்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் தலையீடுகள் மற்றும் மிரட்டல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அரசு நிறுவனங்களில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டிய அவர், டாஸ்மாக் ஊழியர்கள் ஏன் இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஆகவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் இனி காலதாமதமின்றி நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.