இலங்கையில் தேடப்பட்ட போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்புடைய இருவர் தமிழ்நாட்டில் கைது

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த இருவர், சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்றபோது இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: 25 Jul 2026, 01:15 pm
0

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
இலங்கையில் தேடப்பட்ட போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்புடைய இருவர் தமிழ்நாட்டில் கைது

214287414இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் இலங்கையிலிருந்து வந்த படகில் இருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு செல்வதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக சந்தேகநபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடனும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை மீண்டும் இலங்கைக்கு ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தற்போது அவர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு வாரத்திற்குள் அவர்களை இலங்கைக்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.