கண்டியில் பாடசாலை வளாகத்தில் விபத்து: வாகனம் மோதியதில் 7 வயது மாணவன் பலி
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குறித்த பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனம் இரண்டு மாணவர்களை மோதியதாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் தகவலின்படி, பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி சென்றுள்ளார். அந்த நேரத்தில் வாகனத்தின் ஹேண்ட்பிரேக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து, பாடசாலை வளாகத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களை மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 7 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த மற்றொரு மாணவன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வாகன உரிமையாளரான பணிப்பாளர், தாம் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்ற பின்னரே எதிர்பாராத விதமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.