ஆறாம் தலைமுறை வரை இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)'திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Published on: 20 Apr 2026, 05:32 pm
Updated: 3 மாதங்களுக்கு முன்பு
10

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஆறாம் தலைமுறை வரை இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு 'இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ)'திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது பல இன்னல்களுக்கு இதுவொரு தீர்வாக அமையும்..இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணங்கள் இந்திய வம்சாவளியாக ஏற்றுக்கொள்ளப்படும். வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தின் பயனை இலங்கை வாழ் இந்தியர்களும் பெற வேண்டும் என இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் கல்வி உதவுத்தொகையை மேம்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனால் உதவுத் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும், நிதி தொகையும் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப்படும். தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் இயலுமான வகையில் தீர்வு வழங்குவோம். இலங்கையர்களின் மகிழ்ச்சியிலும்,துயரத்திலும்  உற்ற நண்பனாகவும், மூத்த சகோதரனாகவும் இந்தியா இருக்கும் எனவும் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் 19-04-2026 அன்று  இலங்கையிலுள்ள புலம்பெயர் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

காலம் காலமாக பல இன்னல்களை எதிர்கொண்ட இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு இந்திய  அரசாங்கம் பல நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. எமது உறவுகளை சந்திப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கொழும்புக்கு வந்திறங்கியதன் பின்னர் பக்கத்துக்கு நாட்டுக்கு வந்த உணர்வு தோற்றம் பெறவில்லை. மாறாக பக்கத்து வீட்டுக்கு வந்ததைப் போன்று உணர்கிறேன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.பாச உணர்வோடு இந்த பயணம் தொடங்கியுள்ளது.

அனைவருக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தட்டும். இந்த நிகழ்வுக்கு வரும் போது சொந்த ஊரின் திருவிழாவுக்கு வந்த எண்ணம் எனக்குத் தோன்றியது.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் இலங்கை – இந்திய உறவின் உயிர் பாலமாக உள்ளார்கள் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. ஊட்டி முதல் ஹட்டன் வரை, திருச்சியில் இருந்து தலவாக்கலை வரை, இராமநாதபுரம் முதல் றம்பொட வரை, மதுரையில் இருந்து மஸ்கெலியா வரை எமது தொப்புள்கொடி உறவு வியாபித்துள்ளது.

மலையக சமூகம் இன்று பல துறைகளில் முன்னேற்றமடைந்திருப்பது பெருமகிழ்ச்சியாகவுள்ளது. பாராட்டுக்குரியது.இந்திய வம்சாவளி மக்கள் ஆரம்பத்தில் தோட்ட வேலைக்காக மாத்திரம் இங்கு வந்தார்கள். ஆனால் இன்று மருத்துவம், சட்டம், தொழில்நுட்பம் ,வர்த்தகம், அரசியல் உட்பட சகல துறைகளிலும் வளர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இது பாராட்டுக்குரியது. இது அனைவருக்கும் பெருமையாகும். இந்த முன்னேற்றம் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், உலகவாழ் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. தமிழ் தாயின் மகனாக நானும் இன்று பெருமையடைகிறேன்.

இந்திய அரசிலும், இந்திய மக்கள் மனங்களிலும் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு தனித்தொரு இடம் உள்ளது. ' யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்குக்கமைய எமது இரு தரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளது. இலங்கையின் வீட்டுவசதித் திட்டத்துக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறது.

இந்தியாவின் மூன்றாம் கட்ட வீட்டுவசதித் திட்டம் நிறைவுப் பெற்றதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். இன்று வழங்கப்படும் 145 வீடுகளுடன்  3 ஆம் கட்ட வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 4000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு இந்தியா 50 ஆயிரம் வீடுகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

இலங்கையில் வாழும் இந்திய மக்களின் நலன்குறித்து இந்தியா என்றும் அக்கறை கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தந்தப்போது மலையகத்துக்கு சென்றார். அது நம்மவர்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தியது.மலையகத்துக்கு நேரடியாக சென்ற பாரத பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்.

'அனைவருக்குமான வளர்ச்சி' என்ற நோக்கத்துடன் இந்தியா செயற்படுகிறது. இருதரப்பு கூட்டாண்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட பொருளாதாரம் என்ற நிலைப்பாட்டுக்குள்  இருந்து செயற்படுகிறோம். இலங்கை - இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது 'இணைவோம், வளர்வோம்' என்றே அவரிடம் குறிப்பிட்டோம். இந்திய பிரதமர் நரேந்திரமோடி நுவரெலியா சீதையம்மன் கோயில் புனரமைக்கப்படும், அதற்குரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். சீதையம்மன் கோயில் இலங்கை - இந்திய உறவை உலகுக்கு பறைச்சாற்றுகிறது.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு எந்நிலையிலும் உறுதியாக செயற்படுவோம்.இலங்கைக்கு ஏதேனும் இன்னல் என்றால்  விரைந்து வந்து உதவி செய்யும் நாடாகவே இந்தியா காணப்படுகிறது.இலங்கையை நாங்கள் அண்டைய நாடாக பார்க்கவில்லை. சகோதர நாடாகவே பார்க்கிறோம். இலங்கையின் வளர்ச்சி எம் சகோதரனின் வளர்ச்சியாகும்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தந்தபோது இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ) பெற்றுக்கொள்ளும் போது எதிர்க்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் சிக்கல்களை மக்கள் குறிப்பிட்டார்கள். தேவையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இந்த அட்டையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஆகவே இதற்கு தீர்வுப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்கள்.

வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தின் பயனை இந்திய மக்களை போன்று இலங்கையில் வாழும் இந்திய மக்களும் பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். ஓ.சி.ஐ தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு தீர்மானங்களை எடுத்துள்ளது.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டை (ஓ.சி.ஐ) திட்டத்தை ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமது பல இன்னல்களுக்கு இதுவொரு தீர்வாக அமையும்.

இந்திய வம்சாவளி மக்களுக்கான குடியுரிமை அட்டைக்கான  (ஓ.சி.ஐ) விண்ணப்ப நடைமுறை இலகுவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆவணங்கள் இந்திய வம்சாவளியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

காலணித்துவ ஆட்சியில் இந்தியாவில் இருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள்.  அந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் எவ்வித ஆவணமும் இருக்கவில்லை. இதனால் பிற்பட்ட காலத்தில் அவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தார்கள். அவற்றுக்கு தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் கல்வி உதவுத்தொகையை மேம்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனால் உதவுத் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும், நிதி தொகையும் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப்படும். அழியாச் செல்வமான கல்வியை மேம்படுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்திய வம்சாவளி மக்களின்  முன்னேற்றத்தை மென்மேலும் மேம்படுத்துவோம். தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் இயலுமான வகையில் தீர்வு வழங்குவோம்.

தித்வா புயல் தாக்கத்தின் போது இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புக்களை கண்டு ஒட்டுமொத்த இந்திய தேசமும் கவலையடைந்தது.  தித்வா புயல் தாக்கத்தாலும், அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களாலும் உயிரிழந்தவர்களுக்கு இந்த ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தித்வா தாக்கத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'சாகர் பந்து' திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவி கரம் நீட்டினார்.

நிலைமையை ஆராய்ந்து உரிய ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்களை பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு தூதராக அனுப்பினார். ஏற்பட்ட சேதங்களை மீளகட்டமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியினரின் நலன்களை கருத்திற் கொண்டு கண்டியில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலகம்  அமைக்கப்பட்டது. இலங்கை - இந்திய உறவின் மையமாகவே இந்திய வம்சாவளி மக்கள் உள்ளார்கள். இலங்கை கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்ட போது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி உறுதுணையாக இருந்தது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கை - இந்திய உறவு நிலை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினோம்.சவால்மிக்க தற்போதைய பூகோள தருணத்தில் இவ்விரு நாடுகளின்  பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்  சிநேகபூர்வமானதாக அமைந்தது. இலங்கையர்களின் மகிழ்ச்சியிலும்,துயரத்திலும்  உற்ற நண்பனாகவும், மூத்த சகோதரனாகவும் இந்தியா இருக்கும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.