மகா சிவராத்திரி, வார இறுதி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மகா சிவராத்திரி மற்றும் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பயணிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 12-02-2026 (வியாழக்கிழமை), 13-02-2026 (வெள்ளிக்கிழமை), 14-02-2026 (சனிக்கிழமை) மற்றும் 15-02-2026 (ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி) ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு 12ஆம் தேதி 125 சிறப்பு பேருந்துகள், 13ஆம் தேதி 500 பேருந்துகள், 14ஆம் தேதி 505 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு நோக்கி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தலா 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு திசைகளுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாதாவரம் நிலையத்திலிருந்தும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்காக வெள்ளிக்கிழமை 6,901 பயணிகளும், சனிக்கிழமை 5,364 பேரும், ஞாயிற்றுக்கிழமை 10,128 பேரும் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

