கடும் மழையால் மவுசாக்கலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மவுசாக்கலையில் 5 அடி மற்றும் காசல்ரீயில் 15 அடி நீர்மட்ட உயர்வு பதிவாகியுள்ளது.
கடும் மழையால் மவுசாக்கலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மின் உற்பத்தி அமைப்பின் கீழ் செயல்படும் லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத் தொகுதிக்குச் சொந்தமான இந்த இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் கணிசமான அளவில் நீர்மட்ட உயர்வு பதிவாகியுள்ளது.

அதன்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 5 அடியாலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 15 அடியாலும் உயர்ந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், போதுமான மழைவீழ்ச்சி தாமதமாக கிடைத்த காரணத்தால், இன்று (15) காலை நிலவரப்படி மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள் தங்களது முழு கொள்ளளவை விட முறையே 37 அடி மற்றும் 28 அடி குறைவாகவே உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, பிராட்லண்ட்ஸ், கேனியன் மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்மின் நிலையங்களுக்கு தேவையான நீர் பெரும்பாலும் மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களிலிருந்தே வழங்கப்படுகிறது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது மின்சார உற்பத்திக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர