ஹட்டன் சிங்கமலை உச்சியில் சிக்கிய நெதர்லாந்து மாணவி: துரிதமாகச் செயற்பட்டு மீட்ட பொலிஸார்!
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவர், தனது சக மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா மற்றும் ஆராய்ச்சித் திட்டத்திற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார். ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) ஹட்டன், பொன்னகர் வீதியிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலகம் ஒன்றில் தங்கியிருந்தனர்.
நேற்று திங்கட்கிழமை (06) காலை, சிங்கமலை சிகரப் பகுதியில் தனது ஆராய்ச்சித் திட்டத்திற்காக அந்த மாணவி தனியாகப் பயணித்துள்ளார். சிகரத்தின் அழகைப் பார்வையிட்டவாறு மேலே சென்றவர், துரதிர்ஷ்டவசமாகத் திரும்பி வருவதற்கான வழியைக் கண்டறிய முடியாமல் மலை உச்சியிலேயே சிக்கிக்கொண்டார்.
கீழே இறங்க வழியின்றித் தவித்த மாணவி, உடனடியாகத் தான் தங்கியிருந்த தன்னார்வத் தொண்டு நிறுவன அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். அவர்கள் மூலம் ஹட்டன் பொலிஸாருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஹட்டன் பொலிஸ் சிரேஷ்ட கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் தலைமையகப் பிரதம ஆய்வாளர் சுகததாச ஆகியோரின் வழிகாட்டலில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் நிஷாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அடர்ந்த சிங்கமலை வனப்பகுதி ஊடாகக் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் மலை உச்சிக்குச் சென்ற பொலிஸார், அங்கு ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்த மாணவியைக் கண்டுபிடித்தனர்.
வனப்பகுதிக்குள் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததால் களைப்படைந்திருந்த மாணவிக்கு, பொலிஸார் தாம் கொண்டு சென்றிருந்த உணவு மற்றும் பானங்களை வழங்கி முதலுதவி அளித்தனர். பின்னர், அவரை மிகவும் பாதுகாப்பான முறையில் மலை உச்சியிலிருந்து கீழே அழைத்து வந்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆபத்தான சூழலில் இருந்து தன்னைக் காப்பற்றிய ஹட்டன் பொலிஸாருக்கு அந்த யுவதி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அதன்பின்னர், பொலிஸாரின் அறிவுறுத்தல்களுடன் தனது தோழிகளுடன் தான் தங்கியிருந்த சுற்றுலா விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

