ஒற்றை இலக்க சீட் மட்டுமே? திமுக–அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி கணக்குப் போர்

வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுடன் திமுகவும் அதிமுகவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: 11 Feb 2026, 07:26 pm
7

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஒற்றை இலக்க சீட் மட்டுமே? திமுக–அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி கணக்குப் போர்

தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியை பிடித்து வரும் நிலையில், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்த கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக ஒருகாலத்தில் பார்க்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்த தேமுதிக, 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய சக்தியாக திகழ்ந்தது. அப்போது விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.

ஆனால் அதன் பின்னர் தேமுதிகின் அரசியல் பாதை சரிவை சந்தித்தது. 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் 104 இடங்களில் போட்டியிட்டும் வெற்றி எதுவும் பெறவில்லை. 2021 தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் வெற்றி இல்லாமல், வாக்கு சதவீதம் 0.43 ஆக குறைந்தது.

இந்த நிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுடன் திமுகவும் அதிமுகவும் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் அரசியல் வருகையால் ஒவ்வொரு வாக்கும் முக்கியமான சூழலில், தேமுதிகவின் ஆதரவை பெற இரு தரப்பும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், 2021 தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதம் பெற்றதை காரணம் காட்டி, ஒரு எம்.பி. தொகுதியும் சட்டசபையில் ஒற்றை இலக்கத்திற்குள் மட்டுமே சீட்களும் வழங்க முடியும் என இரு கட்சிகளும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, அதிமுக அழைத்த பேச்சுவார்த்தைக்கு தேமுதிக தரப்பில் தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் அதிமுக இனி அவர்கள் விருப்பப்படி முடிவு செய்யட்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், “எங்களுக்கு அதிக இடங்கள் வழங்கும் கூட்டணியுடன் தான் சேர்வோம்” என்ற நிலைப்பாட்டில் தேமுதிக இருப்பதாக கூறப்படுகிறது.

எந்த கூட்டணியில் தேமுதிக இணையப்போகிறது என்பது கட்சித் தொண்டர்களிடையே மட்டுமல்லாது, பிற அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.