மஸ்கெலியா வாழமலையில் தேயிலைத் தொழிலாளர்கள் மீது குளவித் தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லதண்ணி லக்சபான தோட்டத்தின் வாழமலைப் பிரிவில் தேயிலைக் கொழுந்து பறித்துவிட்டு வீடு திரும்பிய நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் வாழமலைப் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த தோட்டப் பகுதியில் வழமைபோன்று தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே எதிர்பாராதவிதமாக குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீனாம்பாள் (52), செல்லம்மாள் (60), யசோதா (41) மற்றும் திருச்செல்வி (41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.